எத்துனை விந்தையானது இந்த உலக வாழ்க்கை, காலம் என்னும் மருந்து எவ்வளவு புண்களை ஆற்றுகிறது. நேற்றைய துன்பங்களை இன்று பார்க்கையில் அவை இவ்வளவு அழுத்தங்களையா கொடுத்தது என்று வியக்கத்தோன்றுகிறது. சில சமயம் துன்பம் வரும்போது அமைதி காப்பதே எதிர்த்து போராடுவதற்கு சமம் என்பதை நம் வாழ்க்கை உணர்த்துகிறது. நாம் கடந்து வந்த பாதைகளை திரும்பிப்பார்த்தாலே எதிர்நோக்கும் இடைஞ்சல்களுக்கு பாதி விடை கிடைத்துவிடும். இந்த வாழ்க்கை கசப்பதாக ஒரு சிலர் சொல்கிறார்கள். ஒவ்வொரு மனிதனின் குறிக்கோள் வேறு இலக்கு வேறு. வாழ்க்கையை எதிர் நோக்கும் போது திறந்த மனதாய் எதிர்பார்த்தல் வெற்றியை தரும். வெற்றிபெற்றவர்களாக நாம் கருதுபவர்களை நோக்கின் அவர்களது இலக்கு நோக்கத்திலிருந்து வேறுபட்டதாக இருக்கும். இந்தியாவிற்கு கடல்வழி கண்டுபிடிப்பதை குறிக்கோளாய் நினைத்த கொலம்பஸ் அடைந்ததோ அமெரிக்காவை, ஆனாலும் அது சாதனைதான். ஏன், அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கும் கிரிக்கெட் வீரர் கும்ப்ளே வேகப்பந்து வீச்சாளராகத்தான் நினைத்தார், அவர் சாதிக்கவில்லையா?.
‘முயற்சியடையார் இகழ்ச்சி அடையார்’-உண்மைதான் முயற்சிதான் முக்கியம் இந்த முயற்சி நமக்கு வெற்றியை தராவிட்டாலும் வாழ்க்கை பாடத்தை நமக்கு கற்பிக்கும். ஏன் முயற்சியுடையார் வெற்றி அடைவார் என்று சொல்லவில்லை. வெற்றி என்பது மனிதனால் எழுதப்பட்ட நியதி, அது வாழ்க்கை நியதியல்ல. இன்றைய உலகத்தில் பணமுடையவர்களைத்தான் வெற்றிபெற்றவர்களாக கருதுகிறோம். எந்த துறையை எடுத்துக் கொண்டாலும் ஒரு சாதனை என்பதை பணத்தால்தான் எடைபோடுகிறோம். உண்மையான வெற்றி என்பது என்ன? அதற்கு விடை காணுவது கடினம்.
ஒரு திரைப்படத்தை இயக்கவேண்டும் எனத் துடிக்கும் உதவி இயக்குனர்கள் வெற்றியாய் நினைப்பது வாய்ப்பை, வாய்ப்பு கிடைத்தபின் வெற்றியாய் கருதுவது படத்தை நன்றாக எடுத்து முடிப்பதை, முடித்தபின் வெற்றியாய் கருதுவது படம் நல்ல வசூலைத்தரவேண்டும் என்பது. இங்கே நபர் ஒருவர்தான் செயலும் ஒன்றேதான் ஆனால் வெற்றி என்பது காலத்திற்கு ஏற்ப வேறுபடுகிறது. ஆனால் இறுதி வெற்றியாகக் கருதுவது பணம் பெறுவதைதான். புகழும் பணமும் ஒன்றே சேரும் செயலைத்தான் அனைவரும் ஆர்வமாக பார்க்கிறோம். இந்த பணம் மனிதனால் கண்டுபிடிக்கப்பட்டது தானே? மனிதன் கண்டுபிடித்த அனைத்திலும் பிரச்சனைதான் கடவுள் உட்பட.

